நட்பாக பழகிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம் - சென்னை வாலிபர் கைது..!
நட்பாக பழகிய இளம்பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்த செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்த சுரேந்தர்(வயது 22) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பை பயன்படுத்தி சுரேந்தர் அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக தெரிகிறது. அதன் பிறகு அந்தப் பெண்ணை பலமுறை தொடர்பு கொண்டு, 'நான் சொல்லும்படி நீ கேட்கவில்லை எனில், இந்த படங்களை நான் உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன்' என மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார். அதன் பிறகும் சுரேந்தர் செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, 'நீ சென்னைக்கு உடனே புறப்பட்டு வர வேண்டும். இல்லையெனில் உன்னுடைய ஆபாச படங்களை உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன்' என மிரட்டி உள்ளார்.
அதன்படியே சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் ஆபாச படங்களை அந்த பெண்ணின் உறவினர் சிலருக்கு செல்போன் மூலமாக அனுப்பி வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் சென்னை சென்று சுரேந்தரை கைது செய்து ஒரத்தநாடு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.