குடும்ப தகராறில் விபரீதம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை


குடும்ப தகராறில் விபரீதம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
x

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமார் (வயது 51). கடலூர்-விருத்தாசலம் சாலையில் லாரிகள் பழுது நீக்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி ஷாகிராபாணு (40). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு பரத் (13) என்ற மகனும், மேகவர்ஷினி (8) என்ற மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

தூக்கில் தொங்கினர்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு குமார் வீட்டின் முன்பக்க அறைக்கு தூங்க சென்றார். மனவேதனையில் இருந்த ஷாகிராபாணு தனது குழந்தைகளுடன் படுக்கை அறைக்கு தூங்கச் சென்றார். இந்த நிலையில், நேற்று காலை அறையில் ஷாகிராபாணு, பரத், மேகவர்ஷினி ஆகிய 3 பேரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த குமார் கதறி அழுதார். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஷாகிராபாணு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்துவிட்டால் குழந்தைகள் எதிர்காலம் வீணாகி விடுமோ? என எண்ணிய அவர் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகன், மகளையும் சேலையால் தூக்கிட்டு கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

புகைப்படத்தில் முகம் அழிப்பு

மேலும் குமார் தனது மனைவி குழந்தைகளுடன் இருந்த புகைப்படங்களில் ஷாகிராபாணு முகம் மட்டும் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஷாகிராபாணு இடம்பெற்ற அனைத்து புகைப்படங்களிலும், அவருடைய முகம் அழிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story