பெரும்பாக்கத்தில் சோகம்: மின் கம்பி அறுந்து விழுந்து இறைச்சி வியாபாரி பலி


பெரும்பாக்கத்தில் சோகம்: மின் கம்பி அறுந்து விழுந்து இறைச்சி வியாபாரி பலி
x

பெரும்பாக்கத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மோட்டார்சைக்கிளில் சென்ற இறைச்சி வியாபாரி மின்சாரம் தாக்கி பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 40). கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று காலை இவர், தன்னுடைய 2 குழந்தைகளையும் அரசங்கழனியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

பெரும்பாக்கம்- நூக்கம்பாளையம் சாலையில் சென்றபோது, திடீரென மின்சார கம்பத்தில் சென்ற உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. அப்போது சாலையில் சென்ற முகமது இஸ்மாயில் மீது மின் கம்பி விழுந்ததில் அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சாலையில் சென்ற நாய் மீது மின்கம்பி விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து நாயும் அதே இடத்தில் செத்தது. அதே சாலையில் வந்த வேன் மீதும் மின்கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக வேன் டிரைவர் உயிர் தப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், திடீரென அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, செம்மஞ்சேரி உதவி கமிஷனர் ரியாசூதீன், இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் பலியான முகமது இஸ்மாயில் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தடுத்த பொதுமக்கள், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றக்கோரி பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறினர்.

சம்பவ இடத்துக்கு தாம்பரம் கோட்டாட்சியர் கவிதா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் போலீசார் பலியான முகமது இஸ்மாயில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story