பொள்ளாச்சியில் பரிதாபம்: தாய் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

பொள்ளாச்சியில் தாய் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தாய் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவன்
கோைவ மாவட்டம் பொள்ளாச்சி அன்சாரி வீதியை சேர்ந்தவர் சரவணபாபு. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31). தையல் தொழிலாளி. இவரது மகன் தருண் (13). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பிளஸ் - 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகளில் மதியத்திற்கு பிறகு பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று படிக்காமல் தருண் டி.வி. பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் மகனை விஜயலட்சுமி திட்டி விட்டு டி.வி. ரிமோட்டை பிடுங்கி வைத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வேலை பார்க்கும் தையல் கடைக்கு சென்றார்.
தற்கொலை
இதற்கிடையில் வீட்டின் அருகில் வசிக்கும் பாட்டி சுப்புலட்சுமி பள்ளிக்கு சென்று விட்டானா என்று பார்ப்பதற்கு சென்றார். அப்போது கதவை தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவில் தொங்கிய நிலையில் தருண் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த சிறுவனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






