திருப்பூரில் பரிதாபம்: காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி


திருப்பூரில் பரிதாபம்: காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி
x

திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காவலாளி மற்றும் 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் என்ற பெயரில் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை செந்தில்நாதன் (வயது 65) என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்தவர்கள், தந்தை அல்லது தாயை இழந்த 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் 15 மாணவர்கள் இருந்தனர். நேற்று அதிகாலை காப்பகத்தில் தங்கி இருந்த சிறுவர்களுக்கு திடீர் வயிறுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

3 சிறுவர்கள் சாவு

இந்தநிலையில் காப்பகத்தில் பெற்றோரை இழந்த திருப்பூரை சேர்ந்த பாபு (13), தந்தையை இழந்த திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த ஆதீஷ் (8) ஆகிய 2 சிறுவர்கள் திடீரென மயங்கி விழுந்து இறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பகத்தில் இருந்த சமையலர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மற்ற சிறுவர்களை அனுமதித்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாதேஸ் (15) என்ற சிறுவனும் பரிதாபமாக இறந்தான். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் காப்பகத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மற்ற சிறுவர்களை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தின் காவலாளியான கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயராமன் (63) என்பவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவரும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையில் இருப்பவர்களை பார்வையிட்டு சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது சிகிச்சையில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கெட்டுப்போன உணவு

உடல்நலக்குறைவு குறித்து சிகிச்சையில் உள்ள சிறுவர்கள் கூறும்போது 'கடந்த 4-ந்தேதி இரவு சுண்டல், புளிசாதம், லட்டு சாப்பிட்டோம். நேற்று முன்தினம் காலையில் இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் மதியம் ரசம் சாதம் வழங்கப்பட்டது. இதை எங்களால் சாப்பிட முடியவில்லை. 2 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். இரவிலும் ரசம் சாதம் வைத்திருந்தார்கள். பின்னர் அதிகாலையில் எங்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அதன்பிறகே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்' என்று தெரிவித்தனர்.

விசாரணை

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதால் இந்த வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ குழுவினர் சிறுவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

காப்பகத்தில் உணவுப்பொருட்கள் மாதிரிகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வெளிநபர்கள் மூலமாக காப்பகத்துக்கு இனிப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த இனிப்பு வகைகள் ஏதேனும் கெட்டுப்போய் இருந்ததா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த சிறுவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் அவர்களின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கலெக்டர் வினீத்த தெரிவித்தார்.

இந்த சம்பவம் காப்பக நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story