நடுவட்டம் அருகே பரிதாபம்: நடுரோட்டில் கார் கவிழ்ந்து கர்நாடக பா.ஜ.க. நிர்வாகி பலி
நடுவட்டம் அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து கர்நாடகா பா.ஜ.க. நிர்வாகி பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
கூடலூர்
நடுவட்டம் அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து கர்நாடகா பா.ஜ.க. நிர்வாகி பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
நடுரோட்டில் கவிழ்ந்த கார்
ஊட்டியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு கூடலூர் நோக்கி வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அப்போது டி.ஆர்.பஜார் - நடுவட்டம் இடையே வந்து கொண்டிருந்த கார் ஒன்று நடுரோட்டில் திடீரென கவிழ்ந்தது. இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
அப்போது காரை ஓட்டி வந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனிடையே விபத்து நடைபெற்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரு ராகவேந்திரா நகரை சேர்ந்த ஜெகதீஷ் மகன் சாமி கவுடா (வயது 38) என்பவர் குடும்பத்தினருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பி செல்லும் போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
பா.ஜ.க. நிர்வாகி பலி
காரில் இருந்த அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து படுகாயம் அடைந்த சாமி கவுடாவை போலீசார் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணிக்கு சாமி கவுடா பரிதாபமாக பலியானார். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த சாமி கவுடா மைசூரு பா.ஜ.க. மண்டல பொதுச்செயலாளர் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து நடுவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.