வால்பாறை அருகே பரிதாபம்: ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர்.

துணி துவைக்க சென்றனர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள சோலையாறு அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்லக்கூடிய சேடல்டேம் ஆற்று பகுதி உள்ளது. சேடல்டேம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முனிச் செல்வி (வயது 32). இவர்களுக்கு தீபிகா (4) என்ற மகளும், சஜித் (7) என்ற மகனும் உள்ளனர். சஜித் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் முனிச் செல்வி தனது மகன் சஜித்துடன் வீட்டுக்கு அருகில் உள்ள சேடல்டேம் ஆற்றில் துணி துவைக்க சென்றுள்ளார். இவர் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது கரையில் விளையாடிக் கொண்டு இருந்த சஜித் எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்தான்.

ஆற்றில் மூழ்கி பலி

இதனை கவனித்த முனிச்செல்வி மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் மகனுடன் முனிச்செல்வியும் ஆற்றில் மூழ்கினார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் குதித்து தாயும், மகனையும் மீட்டனர். எனினும் அவர்கள் 2 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்ததும் சேக்கல்முடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் மூழ்கி தாய்-மகன் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story