விருத்தாசலம் அருகே சோகம்: கார் மோதி தந்தை-மகன் பலி
விருத்தசாலம் அருகே கார் மோதி தந்தை-மகன் பலியாகினர்.
விருத்தாசலம்,
விவசாயி
விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் மேற்குரத வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), விவசாயியான இவரும், இவரது தந்தை தங்கராசுவும் (65) நேற்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்லூர் கிராமத்திற்கு புறப்பட்டனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் பில்லூர் அருகே வந்து கொண்டிருந்தனர்.
காா் மோதியது
அப்போது திருநெல்வேலி தெற்கு தைக்கால் பகுதியை சேர்ந்த அமீர்ஜான் மகன் முகமது ரிஸ்வான் (25) என்பவர் சென்னையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி ஓட்டிச்சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராசு, அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். ரிஸ்வான் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். மேலும் இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனிடையே சக்திவேல், தங்கராசு ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை-மகன் பலி
அங்கு சிகிச்சை பலன்இன்றி சக்திவேல் இறந்தார். தங்கராசு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன்இன்றி தங்கராசு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.