திருமண நாளில் அரங்கேறிய சோகம் - சாலை விபத்தில் மணமகன் உயிரிழப்பு...!


திருமண நாளில் அரங்கேறிய சோகம் - சாலை விபத்தில் மணமகன் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 14 Sept 2022 6:32 PM IST (Updated: 14 Sept 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் நடக்கவிருந்த அன்றே சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானமாக வழங்கி உள்ளனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்-கலா தம்பதி. இவர்களின் மகன் ராஜ் (32). இவர், திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் மின் பராமரிப்பு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும் கடலூர் அருகே சிதம்பரத்தை சேர்ந்த சுமார் 25 வயதான ஒரு பெண்ணுக்கும் கடந்த 12-ம் தேதி காலை திருப்போரூர் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக இருதரப்பு வீட்டினரும் உறவினர்களுக்கு பத்திரிகை அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி தன்னுடன் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களுக்கு திருமண பத்திரிகை வழங்க மோட்டார் சைக்கிளில் ராஜ் சென்றிருந்தார். பின்னர் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது, கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற யோவான் என்பவரின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலைதடுமாறிய ராஜின் மோட்டார் சைக்கிளில் சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் ராஜுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மணமகன் ராஜுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மூளைச்சாவு அடைந்த ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம் செய்த பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story