பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி-மீன்பிடிக்க முயன்ற போது பரிதாபம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரியில் இறங்கி மீன்பிடிக்க முயன்ற பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தத்தெடுத்த தம்பதி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 41). இவர் அரூர் நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (40). இவர்களுக்கு திருமணம் ஆகி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தது.
இதனால் கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதாவின் அண்ணன் செந்தில் என்பவருக்கு பிறந்த பெண் குழந்தையை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தகிரி-சங்கீதா தம்பதி தத்தெடுத்தனர். அந்த குழந்தைக்கு திவ்யதர்ஷினி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
மீன்பிடிக்க முயன்ற மாணவி
இந்த நிலையில் திவ்யதர்ஷினி (12), பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இந்த கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு செல்ல இருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் திவ்யதர்ஷினி தனது தோழிகளான அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் காவியா (11), ஸ்டாலின் மகள்கள் மைதிலி (13), நித்ய ஸ்ரீ (10) ஆகியோருடன் 2 சைக்கிள்களில் மெணசி-விழுதிப்பட்டி ரோட்டில் உள்ள புளியங்குட்டை ஏரிக்கு நேற்று காலை குளிக்க சென்றனர்.
ஏரிக்கு சென்ற மாணவி திவ்யதர்ஷினி அங்கு மீன்கள் துள்ளி குதித்து செல்வதை கண்டு, அவற்றை பிடிக்க முதல் ஆளாக ஏரியில் இறங்கினார். அப்போது மீனை பிடிக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக ஏரியில் ஆழமான பகுதியில் தவறிவிழுந்து மாணவி திவ்யதர்ஷினி தண்ணீரில் மூழ்கினார்.
உடல் மீட்பு
அப்போது ஏரிக்கரையில் இருந்த அவருடைய தோழிகளான சிறுமிகள் காவியா, மைதிலி, நித்ய ஸ்ரீ ஆகியோர் அங்கிருந்தவர்களிடம் திவ்யதர்ஷினியை காப்பாற்ற கூறினார்கள். அப்பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்ற வருவதற்குள், ஆழமான பகுதிக்கு சென்ற அந்த மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மெணசி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம் கொடுத்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் விரைந்து வந்தனர். அவர்கள் ஏரிக்குள் இறங்கி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு திவ்யதர்ஷினியின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
தத்தெடுத்து வளர்த்த குழந்தையான திவ்யதர்ஷினி ஏரியில் மூழ்கி பலியானதை அடுத்து அவளின் வளர்ப்பு பெற்றோர் ஏரிக்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.இந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.