கடலில் மீன்பிடித்தபோது பரிதாபம்: மீனவர் திடீர் சாவு
கடலில் மீன்பிடித்தபோது மீனவர் திடீரென மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் இருந்து ஜெனிடோ (வயது 38) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சை (53), டேனியல் (26), ஜார்ஜ் (60), குமரவேல் (50) ஆகிய 4 பேரும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 10 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்தோணி பிச்சைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் படகினை திருப்பி கரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தியன் போஸ்ட் கார்ட் போலீசார் அவருக்கு முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் கரைக்கு வந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தோணி பிச்சையை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்தோணி பிச்சை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர காவல் குழுமத்தினர் அந்தோணி பிச்சையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.