மின்சார பல்பை சரி செய்தபோது பரிதாபம்: ஏணியில் இருந்து தவறி விழுந்த ரைஸ்மில் தொழிலாளி பலி
மின்சார பல்பை சரி செய்தபோது ஏணியில் இருந்து தவறி விழுந்த ரைஸ்மில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் உள்ளது. இந்த ரைஸ் மில்லில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 47) என்பவர் நெல் அரைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 20 அடி உயரத்தில் உள்ள நெல் அவிக்கும் எலிவேட்டர் என்ற இடத்தில் இருந்த மின்சார பல்பு பழுதாகி இருந்தது. இதனை சரி செய்வதற்காக சக்திவேல் ஏணிப்படி வழியாக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.