விராலிமலை அருகே மின்வயரை அறுத்து சென்ற டிரெய்லர் லாரி-இளைஞர்கள் விரட்டி சென்றபோது விபத்தில் சிக்கி வடமாநில டிரைவர் பலி
விராலிமலை அருகே மின்வயரை அறுத்து சென்ற டிரெய்லர் லாரியை சினிமா பாணியில் இளைஞர்கள் விரட்டி சென்றபோது விபத்தில் சிக்கி வடமாநில டிரைவர் பலியானார்.
வடமாநில டிரைவர்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சகீர் அகமத் (வயது 39), டிரைவர். இவர் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு டிராக்டர்களை ஏற்றுவதற்காக உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட டிரெய்லர் லாரியில் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர்- விராலிமலை சாலையில் சென்றுள்ளார். கல்குடி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின்வயரில் டிரெய்லர் லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்துள்ளது. இதில் டிரெய்லர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் டிரெய்லர் லாரியை தடுத்து நிறுத்தி மின்வயருக்கான தொகையை பெற்று டிரெய்லர் லாரியை விடுவித்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
அதன்பிறகு அங்கிருந்து சென்ற டிரெய்லர் லாரி விராலிமலை காமராஜர் நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மற்றொரு மின்வயர் மீது உரசியதில் மின்வயர் அறுந்ததை கவனிக்காமல் சகீர் அகமத் டிரெய்லர் லாரியை ஓட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் டிரெய்லர் லாரியை துரத்தி சென்று முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அந்த டிரெய்லர் லாரியை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து சகீர் அகமத் டிரெய்லர் லாரியை ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த டிரெய்லர் லாரியை சினிமா பாணியில் விரட்டி சென்றுள்ளனர்.
3 பேர் கைது
விராலிமலை- மதுரை சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலர் டிரெய்லர் லாரி மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டிரெய்லர் லாரி சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் டிரெய்லர் லாரி டிரைவர் சகீர் அகமத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகீர் அகமத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரெய்லர் லாரியை துரத்தி சென்ற விராலிமலையை சேர்ந்த ஹரிஹரன், ரவிச்சந்திரன், ஆரோக்கிய ஜார்ஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் காமராஜர் நகரை சேர்ந்த கணேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.