வாடகை உயர்வு கோரி டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


வாடகை உயர்வு கோரி டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x

வாடகை உயர்வு கோரி டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் அதானி துறைமுகங்களில் கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை டிரைலர் லாரிகள் மூலம் சரக்கு பெட்டக நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிசோதனைக்கு பிறகு பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைலர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

டிரைலர் லாரி உரிமையாளர்களுக்கு சரக்கு பெட்டக முனையங்கள் கடந்த 8 வருடமாக வாடகையை உயர்த்தி தரவில்லை. எனவே விலை வாசி உயர்வு காரணமாக லாரிகளுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று 14 சங்கங்கள் இணைந்து. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது 25 சதவீத வாடகையை உயர்த்தி தருவதாக சரக்கு பெட்டக முனையங்கள் அறிவித்தன. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் அறிவித்தபடி வாடகையை உயர்த்தி கொடுக்கவில்லை.

இதையடுத்து அறிவித்தப்படி வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி அனைத்து துறைமுக டிரைலர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைலர் லாரிகளை சாலையோரம் நிறுத்தி விட்டு தமிழ்நாடு டிரைலர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் சென்னை துறைமுக ஜீரோ கேட் நுழைவாயிலில் 100-க்கும் மேற்பட்ட டிரைலர் லாரி உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கையில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story