ரெயிலில் செல்வதற்கு பயணிகள் கூட்டம் அதிகம்
உடுமலையில், திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் செல்வதற்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால். பயணிகள், நெரிசலுடன் நின்று கொண்டே பயணம் சென்றனர்.
உடுமலை
உடுமலையில், திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் செல்வதற்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால். பயணிகள், நெரிசலுடன் நின்று கொண்டே பயணம் சென்றனர்.
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் செல்லும் வகையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி பாலக்காட்டில் இருந்து உடுமலை, மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் கடந்த 8-ந் தேதி முதல், வழக்கமாக இருக்கும் 12 பெட்டிகளுடன் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 கூடுதல் பெட்டிகள் நாளை (திங்கட்கிழமை) வரை இணைக்கப்பட்டிருக்கும் என்று தென்னக ரெயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
அலைமோதும் கூட்டம்
இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த நிலையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. சனிக்கிழமையான நேற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் இடம் பிடிக்க பயணிகள் அலைமோதினர். ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு வந்த போதே, அதில் பயணிகள் உட்கார இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே வந்தனர்.
அத்துடன் உடுமலையில் இருந்து ரெயிலில் புறப்பட்ட பயணிகளும் நின்று கொண்டே சென்றனர்.