சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு


சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு
x

மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் நேற்று அதிகாலையில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை


மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் நேற்று அதிகாலையில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

என்.எம்.சி. பெட்டிகள்

மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இது போன்ற வாகனங்களை ஏற்றிச் செல்வதற்கு என, பழைய பார்சல் பெட்டி மற்றும் பயணிகள் பெட்டியை மாற்றி வடிவமைத்த என்.எம்.சி. ரக பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பெட்டிகளை பராமரிக்கும் மையம் (கேர் சென்டர்) மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ளது. இதற்கிடையே, வாடிப்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ரக பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில், பராமரிப்பு பணிக்காக மதுரை ரெயில் நிலையம் கொண்டுவரப்பட்டது. அந்த, ரெயில் 3-வது பிளாட்பாரத்துக்கான தண்டவாளத்தில் வந்தபோது ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த 8, 9 மற்றும் 10-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர்கள், உடனடியாக கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், நள்ளிரவு 2 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் அபாய சங்கு திடீரென ஒலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால், கோட்ட மேலாளர் அனந்த், முதுநிலை இயக்க மேலாளர், முதுநிலை வர்த்தக மேலாளர், முதுநிலை மெக்கானிக்கல் என்ஜினீயர் உள்ளிட்ட 11 பிரிவுகளின் அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.

தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்

அதனை தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டது. பின்னர் விபத்து மீட்பு கிரேன் மூலம் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், 3-வது பிளாட்பாரத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.

ரெயில் பெட்டிகளின் மீட்பு பணிகள் அதிகாலை 5.30 மணி வரை நடந்தது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் 1-வது மற்றும் 2-வது பிளாட்பார தண்டவாளங்களில் மட்டும் நின்று சென்றதால், ரெயில்களின் போக்குவரத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், தென்மாவட்ட ரெயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.தடம்புரண்ட சரக்கு ரெயிலானது, நேற்று காலை 8.30 மணிக்கு பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விசாரணை குழு

பொதுவாக அதிக நீளம், அகலத்துடன் கூடிய பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை பிளாட்பாரங்கள் இல்லாத தண்டவாளத்தின் வழியாக இயக்குவது வழக்கம். ஆனால், இந்த ரெயிலை 3-வது பிளாட்பாரத்தில் இயக்கிய போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெயில் 12 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து, விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையில்தான், எந்த இடத்தில் தவறு நடந்தது என்பது தெரியவரும்.


Next Story