ராயக்கோட்டை அருகே, சீரமைப்பு பணிகள் நிறைவு:சரக்கு ரெயில் தடம் புரண்ட வழியில் மீண்டும் ரெயில்கள் இயக்கம்


ராயக்கோட்டை அருகே, சீரமைப்பு பணிகள் நிறைவு:சரக்கு ரெயில் தடம் புரண்ட வழியில் மீண்டும் ரெயில்கள் இயக்கம்
x
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சரக்கு ரெயில் தடம்புரண்ட வழியில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

மீட்பு பணிகள்

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு உர மூட்டைகளை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தடம் புரண்டது. இதையடுத்து தர்மபுரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ராட்சத கிரேன், பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன.

இதனால் தர்மபுரி- பெங்களூரு மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த ரெயில் விபத்து குறித்து தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்கள் மீண்டும் இயக்கம்

இதனிடையே தடம்புரண்ட 6 பெட்டிகளை கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்தது. இந்த பணி நேற்று நள்ளிரவில் முடிவடைந்தது. இதையடுத்து தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகளும் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

அப்போது சரக்கு ரெயில் தடம்புரண்ட இடம் அருகே ரெயில்கள் வரும்போது மெதுவாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று காலை இயக்கப்பட்ட ரெயில்கள் அந்த பகுதியில் வந்தபோது மெதுவாக சென்றன. மேலும் நிறுத்தப்பட்ட மற்றும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட ரெயில்களும் மீண்டும் அந்த வழியில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story