தேனி வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சென்னை சென்று வர நாமக்கல் மாவட்ட மக்கள் 10 ஆண்டு காலமாக நம்பி இருப்பது பாலக்காடு- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரெயில் ஒன்றை மட்டுமே. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர் வழியாக இயங்குவதால் நாமக்கல் மக்களுக்கு எளிதாக பயணச்சீட்டு கிடைப்பது இல்லை. தற்போது இந்த ரெயிலில் நாமக்கல், ராசிபுரம், மோகனூர் ஆகிய 3 ஊர்களுக்கும் சேர்த்து குறைந்த பயண சீட்டு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு கிடைக்காத காரணத்தால் பயணிகள் அதிக பயண தொகை கொடுத்து பஸ்சில் பயணிக்கின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை இயங்கி கொண்டிருக்கும் சென்னை சென்ட்ரல்- மதுரை அதிவேக விரைவு ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ஆனால் மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் நிற்காமல் செல்கிறது. கடந்த 5 ஆண்டாக நாமக்கல் வழியாக செல்லும் இந்த ரெயிலுக்கு நாமக்கல்லில் நிறுத்தம் இல்லை.
மேலும் வருகிற 15-ந் தேதி முதல் சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரெயிலை தேனி வரை நீடிக்க தெற்கு ரெயில்வே, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை- தேனி புதிய பாதையில் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற சிறிய ஊர்களுக்கு நிறுத்தம் வழங்கப்பட்டு உள்ளது. நாமக்கல்லை சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலை துறை இணை மந்திரி எல்.முருகன் இந்த ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
சென்னை- மதுரை ரெயில் சென்னையில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9:35 மணிக்கு போடிநாயக்கனூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும். இந்த ரெயில் நாமக்கல்லை காலை 4 மணிக்கு கடந்து செல்லும். மறுமார்க்கமாக இந்த ரெயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் போடிநாயக்கனூரில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7:55 மணிக்கு சென்னை செல்லும்.
இந்த ரெயில் நாமக்கல்லை அதிகாலை 1:30 மணிக்கு கடந்து செல்லும். பல்வேறு மாநிலத்தில் இருந்து நாமக்கல் வரும் தொழில் முனைவோர் வந்து செல்ல போதிய ரெயில் வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லும் பட்சத்தில் நாமக்கல் மக்களுக்கு பெரிதும் பயனு உள்ளதாக இருக்கும். எனவே இந்த ரெயிலுக்கு நாமக்கல்லில் நிறுத்தம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.