திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் இயக்கம்
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் இயக்கப்பட்டது. இதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் இயக்கப்பட்டது. இதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ரெயில் சேவை தொடக்கம்
கொரோனா நோய் தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதில் நிறுத்தி வைக்கப்பட்ட மயிலாடுதுறை-திருவாரூர் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக நாகை எம்.பி. செல்வராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்கங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் மயிலாடுதுறை- திருவாரூர்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்தது.
திருவாரூரில் இருந்து இயக்கம்
அதன்படி நேற்று முதல் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு விரைவு ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த ரெயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதன் முறையாக திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்டது.
திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 9.15 மணிக்கு சென்று அடைந்தது. மீண்டும் மாலை 6.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடைந்தது. இந்த பயணிகள் ரெயில் சேவையானது அலுவலகம் செல்வோருக்கும், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இனிப்பு வழங்கினர்
2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ரெயில் இயக்கப்பட்டதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதற்கான நிகழ்ச்சியில் ரெயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ரெயில் நிலைய மேலாளர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள், ரெயில் என்ஜின் டிரைவர், கார்டு ஆகியோருக்கு இனிப்பு வழங்கினர்.