வேலூர் கண்டோன்மென்ட்- அரக்கோணம் இடையே 4-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை


வேலூர் கண்டோன்மென்ட்- அரக்கோணம் இடையே 4-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை
x

வேலூர் கண்டோண்ட்மெண்ட், அரக்கோணம் இடையே நிறுத்தப்பட்ட ரெயில்சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு 4-ந் தேதி முதல் தொடங்குகிறது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

வேலூர் கண்டோண்ட்மெண்ட், அரக்கோணம் இடையே நிறுத்தப்பட்ட ரெயில்சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு 4-ந் தேதி முதல் தொடங்குகிறது.

ரெயில்சேவை நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொது முடக்கம் அமலில் இருந்த போது ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. நோய் பரவல் சற்று குறைந்ததால் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது தெற்கு ரெயில்வே புறநகர் ரெயில் சேவையினை படிப்படியாக வழங்கியது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளுகளாக அரக்கோணம்- வேலூர் கண்டோன்மென்ட் இடையே ரெயில் சேவை தொடங்கப்படாத நிலையிலேயே இருந்தது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து பொதுமக்களும், அரக்கோணம் மற்றும் சித்தேரி ரெயில் பயணிகள் சங்கங்கள் சார்பிலும் அரக்கோணம்- வேலூர் கண்டோன்மென்ட் இடையிலான ரெயில் சேவையினை மீண்டும் தொடங்க வலியுறுத்தி தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மீண்டும் தொடக்கம்

இதனையடுத்து அரக்கோணம்- வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் சேவை வரும் ஜூலை 4-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகவும் சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி இயக்கப்படும் இந்த மெமு ரெயில் அரக்கோணம் முதல் வேலூர் கண்டோன்மெண்ட் வரையில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இவ்வாறு அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் இந்த ரெயிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் பெறக்கூடும் என்பதால் பொது மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகளான நைனா மாசிலாமணி மற்றும் குணசீலன் ஆகியோர் தெரிவித்தபோது இரண்டு ஆண்டுகளுக்கு பின்அரக்கோணம் - வேலூர் கண்டோன்மென்ட் இடையிலான ரெயில் சேவையினை மீண்டும்தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க கூடியது. அதற்காக தெற்கு ரெயில்வேக்கு ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

சாதாரண கட்டணம்

ஆயினும் பயணிகள் சாதாரண கட்டணத்தில் சென்று வந்த நிலையில் தற்போது எக்ஸ்பிரஸ் கட்டணமாக மாற்றப்பட்டுள்ளதால் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள். எனவே, எக்ஸ்பிரஸ் கட்டணத்தை ரத்து செய்து சாதாரண கட்டணத்தில் இந்த ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story