கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி-அதிகாரி தகவல்


கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கட்டுமான தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 3 ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கொத்தனார், வெல்டர், எலக்ட்ரீசியன், குழாய் பொருத்துதல், மரவேலை செய்தல், கம்பி வளைத்தல் ஆகிய பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

பயிற்சி, உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தால் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். முதல் மாத பயிற்சி காஞ்சீபுரம் மாவட்டம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த இரண்டு மாத பயிற்சி காஞ்சீபுரம் மாவட்டம் நீவழூரில் உள்ள கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் வழங்கப்படும்.

ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். இந்த பயிற்சிகளை பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story