மேல்மலையனூரில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
மேல்மலையனூரில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
திண்டிவனம்,
மேல்மலையனூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3- ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும், கற்றல் ஆர்வத்தை வளர்க்க ஏதுவாகவும், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்ற பயிற்சி முகாம் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜமுனா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திருமால் முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பு கண்காணிப்பாளர் காளிதாஸ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், மேற்கண்ட முகாமில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயிற்சி பெற்று சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி நம் ஒன்றியத்தை முன் மாதிரியாக இருக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். முகாமில் பயிற்சி விரிவுரையாளர் கருப்பதுரை கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறன் குறித்து பயிற்சி அளித்தார்.