பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வகுப்பை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் அடுத்த கரியம்பட்டியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்கும் வகையிலான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சீனுவாச குமரன் தலைமை தாங்கினார். கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பணி வழங்கல் அலுவலர் உமா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு, பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நூலகங்களை பயன்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், நாமக்கல், தர்மபுரி ஆகிய 3 ஊர்களில் மட்டும்தான் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இது பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் படித்து அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற வாய்ப்புகள் உங்களை தேடி வருகிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தினால், கல்லூரி முடித்து விட்டு வெளியே செல்லும் போது, அரசு பணியுடன் செல்லலாம்.
இப்போது பல மாணவர்கள் நூலகம் எங்குள்ளது எனக்கேட்டால் முழிக்கின்றனர். அது முற்றிலும் தவறு. அனைவரும் நூலகங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார்.
மாணவிகள் விடுதி
திருப்பத்தூர் அடுத்த கும்மிடிகாம்பட்டியில் 100 பழங்குடியின மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் நல விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கலைச் செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் விடுதியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.