விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி


விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி
x

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் படநிலை கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், உழவன் செயலியைப் பயன்படுத்தி இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கி பேசினார். வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் கவுதீஷ் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். அப்போது, விவசாயத்துடன் ஒன்றையொன்று சார்ந்த கூடுதல் வருவாய் தரக்கூடிய ஆடுமாடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மரக்கன்றுகள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால், விவசாயிகள் வருமானத்தை தடையின்றி ஈட்டலாம் என்று கூறினார்.

மேலும் வேளாண் பயிர்கள் சாகுபடியில் மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டும் அட்டை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணி அட்டை கொண்டு பூச்சிகளை அழிப்பது, இனக்கவர்ச்சிப் பொறி கொண்டு பூச்சிகளைக் கவர்ந்தழிப்பது போன்ற அங்கக பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை விளக்கி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்குமார், ஆரோக்கியராஜ், முன்னோடி விவசாயி கருணாநிதி, மோகன் ஆகியோர் செய்திருந்தனர். படநிலை கிராமத்தின் கலைஞர் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.


Next Story