விவசாயிகளுக்கு பயிற்சி
சேரன்மாதேவி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டம், உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்திற்கு 40 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இப்பயிற்சியில் மண்ணியியல் துறை பேராசிரியர் ஜானகி, இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பூச்சியியல்துறை பேராசிரியர் சுகந்தி அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சி விரட்டிகளான 3ஜி கரைசல், ஐந்திலை கரைசல், தேமோர் கரைசல், முட்டை கரைசல் தயாரிப்பது மற்றும் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் முத்துவேல் அடர் நடவு முறையில் மா, கொய்யா நடவு முறைகளை பற்றி எடுத்துரைத்தார். பேராசிரியர் சண்முகசுந்தரம் காய்கறி பயிர்களில் பயன்படுத்தப்படும் மஞ்சள் வண்ண அட்டைப் பொறி குறித்தும், இளநிலை வேளாண்மை அலுவலர் கஸ்தூரி ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தீவனப் பயிர் சாகுபடி குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.