யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி -தமிழக அரசு உத்தரவு
யானைகள் பராமரிப்பு தொடர்பாக தமிழக பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, திருச்சி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன. இவற்றில் 63 யானைகள் பாராமரிக்கப்படுகின்றன.
தாய்லாந்தில்...
அங்கு 37 பாகன்கள், 28 உதவியாளர்கள் மற்றும் 56 ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்ளனர். தற்போது உள்ளூர் மலைவாழ் மக்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்து யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கால மாறுபாடு மற்றும் விலங்கு நலவாழ்வு அடிப்படையில் யானைகள் பராமரிப்பு, விஞ்ஞான பூர்வமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன்படி, தாய்லாந்தில உள்ள புகழ்பெற்ற லாம்பெங்கில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், தமிழக யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முன்வந்துள்ளது.
ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவா தேஜா, வனச்சரகர் எம்.சுந்தரவேல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 3 உதவியாளர்கள் என 6 பேரும், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ், தெப்பக்காடு யானைகள் முகாமின் விலங்குகள் ஆய்வாளர் ஆர்.ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 4 உதவியாளர்கள் தாய்லாந்து செல்ல உள்ளனர். இதற்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.