பொள்ளாச்சி அருகே தென்னை வேர்வாடல் நோயை கண்டறிவது குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி
பொள்ளாச்சி அருகே தென்னை வேர்வாடல் நோயை கண்டறிவது குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி
கோவை மாவட்டத்தில் தென்னையை தாக்கும் வேர்வாடல் நோயை கண்டறிய கள ஆய்வு மேற்கொள்வதற்கு வேளாண்மை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணை பேராசிரியர் லதா, உதவி பேராசிரியர் (பயிர் நோயியல்) செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) வெங்கடாச்சலம், துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா, துணை இயக்குனர் (மாநில திட்டம்) விஜயகல்பனா ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். தென்னை வேர்வாடல் நோயை கண்டறிந்து மதிப்பீடு செய்தல் என்ற தலைப்பில் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் லதா பேசினார். அப்போது அவர் வேர்வாடல் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் முறைகள், சமச்சீர் உரமேலாண்மை, முறையான பாசன மேலாண்மை, வேர்உயிரிபெருக்கம் எதிரி உயிரிபயன்பாடு குறித்தும், ஊடுபயிரான கோகோவை சாகுபடி செய்து பயன்பெறலாம் என்றார். இதில் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட 130 பேர் கலந்துகொண்டனர். முடிவில் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சுதாலட்சுமி நன்றி கூறினார்.