பாம்புகளை கையாளும் முறை குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி


பாம்புகளை கையாளும் முறை குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 28 Jun 2023 7:30 AM IST (Updated: 28 Jun 2023 7:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அட்டகட்டி வனமேலாண்மை மையத்தில் பாம்புகளை கையாளும் முறை குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அட்டகட்டி வனமேலாண்மை மையத்தில் பாம்புகளை கையாளும் முறை குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில், வால்பாறை அட்டகட்டி வனமேலாண்மை பயிற்சி மையத்தில் பாம்புகளை கையாளும் முறை குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார்.

பயிற்சியில் வால்பாறை, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதிகளைச் சேர்ந்த வனப் பணியாளர்களும், வால்பாறை தீயணைப்பு வீரர்களுக்கும் கலந்து கொண்டனர்.

இதில் வால்பாறையில் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் பாம்புகளை வனத்துறையினர், தீயணைப்பு படையினர் பிடித்து வனப்பகுதியில் விடுகின்றனர். இவ்வாறு பாம்புகளை பிடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்த பயிற்சியின் போது எடுத்துக் கூறப்பட்டது.

துன்புறுத்தி பிடிக்க கூடாது

பாம்புகளை பிடிக்கும்போது அதன் உடலில் காயங்கள் ஏற்படக்கூடாது. பாம்புகளை துன்புறுத்தி பிடிக்க கூடாது. விஷத் தன்மை கொண்ட பாம்புகளை கவனமாக பிடிக்க வேண்டும். பாம்புகளை பிடிப்பதற்காக உள்ள ஆயுதங்களை பயன்படுத்தி பிடிக்க வேண்டும்.

பிடித்த பாம்புகளை விரைவாக வனப் பகுதியில் கொண்டு போய் விட வேண்டும். பிடிக்கப்படும் பாம்புகள் வனப் பகுதியில் விடப்படும் போது அவைகள் உயிர் வாழும் வகையில் இருக்க வேண்டும். பாம்புகளும் வனப் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மிகவும் கவனமுடன் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும்.

விழிப்புணர்வு

மேலும் பாம்புகளின் சிறப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குடியிருப்புக்குள் பாம்பு புகுந்துவிட்டால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பயிற்சியில் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கணேஷ் ரகுராம், சீனிவாசன், இந்திரா நாயுடு, பாம்பு பிடிக்கும் ஆர்வலர்கள் பிராங் பெஞ்சமின், தீயணைப்பு வீரர்கள் பிரகாஷ் குமார், ராஜேஷ் குமார் இவர்களுடன் பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொள்ளும் முன் களப் பணியாளர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்டகட்டி வனமேலாண்மை பயிற்சி மையத்தின் வனவர், பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story