தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பயிற்சி


தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முதுமலை வனப்பகுதி

முதுமலை புலிகள் காப்பகம், பாதுகாக்கப்பட்ட வனமாக உள்ளது. இங்கு காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. வனத்தில் தாயை பிரிந்து தவிக்கும் மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து, இந்த முகாமில் பயிற்சி அளித்து வனத்துறையினர் கும்கிகளாக மாற்றி பராமரிக்கின்றனர்.

மேலும் வனப்பகுதியில் ரோந்து செல்லுதல், வனக்குற்றங்களை தடுத்தல், கோடைகாலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்காக முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.

மீட்பு படையினருக்கு பயிற்சி

இந்த நிலையில் வனப்பகுதியில் பரவும் தீயை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி பெறுவதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா 10-வது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் நேற்று முதுமலைக்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் குறித்து முதுமலை தெப்பக்காட்டில் மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வன பணியாளர்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆபத்தான மற்றும் அவசர காலங்களில் பரவும் தீயை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு முதுமலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை சி.ஏ.எஸ்.எப்.ஓ.எஸ். கல்லூரி மூலம் கடந்த 6 முதல் 18-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு வன பகுதிகளில் பயிற்சி தொடர்ந்து நடைபெற உள்ளது என்றனர்.


Next Story