பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி திருக்கோவிலூரில் நடந்தது.
திருக்கோவிலூர்,
மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருக்கோவிலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி கூட்டம் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் யோகஜோதி தலைமை தாங்கினார். தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயானாளிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், அதற்கான வழிமுறைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.