ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை,
ஆனைமலையில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பயிற்சி
ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேல் குடியிருப்புகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சுமார் 7½ டன் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படுகின்றது. காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாகவும் மற்றும் மண்புழு உரமாகவும் தயாரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கவர் போன்றவற்றை மறுசுழற்சி செய்யவும் விற்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாதத்திற்கு 2 முறை பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த தீவிர முயற்சியால் குப்பைகள் மலை போல் குவியாமல் உரம் தயாரிப்பது தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இயற்கை உரம்
மக்கும் குப்பைகளை நிழலான பகுதியில் 10 அடி நீளம், 3 அடி உயரம் மற்றும் 3 அடி அகலத்துக்கு படுக்கை அமைத்து முதல், 15 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டு 45-வது நாளில் மக்கும். அதன் பின்னர் இ.எம். கரைசல் தெளிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மக்காத குப்பையான, கவர், பாட்டில் என பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்ய விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி கூறியதாவது:- ஆனைமலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 6 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்படுகிறது. என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேரூராட்சியில் இயற்கை உரம் தயாரிக்க மற்றும் மண்புழு தயாரிக்க குப்பை கிடங்கில் இடவசதி இன்றி தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மாசாணி அம்மன் கோவிலில் சிறப்பு நாட்களில் குப்பைகளை எடுக்க குறைவான டிராக்டர் உள்ளது. இதனை தவிர்க்க ஆனைமலை பேரூராட்சிக்கு என்று கூடுதலாக ஒரு டிப்பர் லாரியை வழங்கினால் குப்பையில்லா பேரூராட்சியாக விளங்க ஏதுவாக இருக்கும். தற்போது ஆனைமலை பேரூராட்சியில் 4 டன் இயற்கை உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.