தமிழக அரசின் பயிற்சி நிறுவனம் மூலம் போலீஸ் தேர்வுக்கு 'யூடியுப்' வழியாக பயிற்சி


தமிழக அரசின் பயிற்சி நிறுவனம் மூலம் போலீஸ் தேர்வுக்கு யூடியுப் வழியாக பயிற்சி
x

சென்னை:

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கல்லூரி சார்பில் 'யூடியுப்' சேனல் (AIM TN) ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வை நவம்பர் 27-ந் தேதி நடத்தவுள்ளது. இதற்கான நேர்முக இலவசப் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் போட்டித் தேர்வு மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியிலும், நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றன.

நேரடிப் பயிற்சி வகுப்புகளில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் பங்கெடுக்க முடியும். மேலும் சென்னை தவிர இதர பகுதிகளில் வசிப்போருக்கு இதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இந்தப் பயிற்சி தமிழகமெங்கும் உள்ள அனைவருக்கும் சென்றடையும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது 'யூடியுப்' சேனலில் இத்தேர்விற்கான பயிற்சி வீடியோக்களை இன்று முதல் பதிவேற்றம் செய்து வருகிறது.

தமிழ், இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு-ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், பொது அறிவு-நடப்பு நிகழ்வுகள், உளவியல், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் என்று தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 70 'வீடியோக்கள்' பதிவேற்றம் செய்யப்படும்.

இது தமிழகம் முழுவதில் இருந்து போலீஸ் தேர்வை எழுத உள்ள இளைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story