இளைஞர்களின் தனித்திறமைகளை வளர்க்க பயிற்சி
தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு முதன்மை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறமைகளை வளர்த்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு முதன்மை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்து உள்ளார்.
தனித்திறமைகள்
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களின் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்ட நான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் சமீரன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கிற்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டி.உதயச்சந்திரன் தலைமை தாங்கி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற தனது கனவுத் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்கள்.
இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முக திறமையினை மேம்பட செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
தொழில்நுட்பம்
அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கக்கூடிய கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மண்டல அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்றைய தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குனர் விஜயகுமார், மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.