பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பயிற்சி பட்டறை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், கரூர் மாவட்டத்தில் பணி புரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக கேடயம் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. பணி புரியும் பெண்ணுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது யாரை அணுகுவது, எப்படி சட்ட உதவி பெறுவது என்று பயிற்சி அளிக்கப்்படுகிறது. பயிற்சி அளிப்பவர்களின் கருத்துக்களை கேட்டு வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்த கட்டமாக தனியார் கல்லூரிகள், தனியார் தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற குழுக்களை அமைத்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். முன்னதாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயல்படுத்தும் குழுக்களுக்கான வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.