நெல்லைக்கு வரும் ரெயில்கள் நேரம் மாற்றம்


நெல்லைக்கு வரும் ரெயில்கள் நேரம் மாற்றம்
x

வேகம் அதிகரிப்பால் நெல்லைக்கு வரும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வேகம் அதிகரிப்பால் நெல்லைக்கு வரும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செபி டி.ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட 5 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 3 ரெயில்கள் நெல்லை சந்திப்புக்கு வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே வந்து செல்கிறது.

சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர் சந்திப்புக்கு அதிகாலை 1.43 மணிக்கு பதிலாக 1.35 மணிக்கு வந்து புறப்படும். நெல்லை சந்திப்புக்கு அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 3.20 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்படும்.

கோவை எக்ஸ்பிரஸ்

கோவை- நாகர்கோவில் அதிவிரைவு ரெயில் விருதுநகருக்கு அதிகாலை 1.13 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், கோவில்பட்டிக்கு 1.50 மணிக்கு பதிலாக 1.40 மணிக்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 2.48 மணிக்கு பதிலாக 2.18 மணிக்கும் வரும். நெல்லை சந்திப்புக்கு அதிகாலை 3.20 மணிக்கு பதிலாக 20 நிமிடங்கள் முன்னதாக அதாவது அதிகாலை 3 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மதுரை-புனலூர்

மதுரை- புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சி மணியாச்சிக்கு அதிகாலை 1.23 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், நெல்லை சந்திப்புக்கு 2.40 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கும் வந்து செல்லும். இந்த ரெயில் வள்ளியூருக்கு 3.21 மணிக்கு பதிலாக 2.38 மணிக்கும் வந்து செல்லும்.

மற்ற ரெயில் நிலையங்களில் இந்த ரெயில்கள் வழக்கம்போல் வந்து செல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story