சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தம்
அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதுடன், சிக்னல் பழுதடைந்ததால் ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சிக்னல் பழுது
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இதன் காரணமாக அரக்கோணம்- மேல்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பகுதியில் மழைநீர் தேங்கியது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள ரெயில்வே சிக்னல்களில் அதிகாலை 5 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனால் இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
ரெயில்கள் நிறுத்தம்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிக்னல் பழுது காரணமாக கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
அதேபோல் அரக்கோணம் - திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம்- செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரெயில்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் ஊழியர்கள் பழுதை சரி செய்த பின்னர் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. ஒரு மணி நேரம் ரெயில்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.