ஏ.டி.எம்.மில் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு


ஏ.டி.எம்.மில் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
x

புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.மில் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரத்தை பெண் போலீஸ் ஏட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மேல 6-ம் வீதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று திலகர் திடல் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் வைப்பு தொகை செலுத்தும் எந்திரத்தில் ரூ.23 ஆயிரத்து 700 செலுத்தி உள்ளார். அப்போது பணம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிக்கொண்டது என பழனிவேலு கருதி அங்கிருந்து சென்றார். அந்த நேரத்தில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு உத்ராணி அங்கு வந்தார். அங்கு பணம் செலுத்தக்கூடிய ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 ஆயிரத்து 700 வெளியே இருந்தது. அப்போது அதனை யார் விட்டுச்சென்றது என அவருக்கு தெரியவில்லை. அங்கிருந்தவர்களிடம் யாராவது வந்து பணம் கேட்டால் வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு, டவுன் போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறி அதனை மீட்டு வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கி கொண்டதாகவும், அதனை மீட்டு தருமாறும் வங்கியில் பழனிவேலு புகார் கடிதம் கொடுத்தார். அப்போது அதிகாரிகள் நடந்த விவரத்தை கூறியிருக்கின்றனர். இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேற்று பழனிவேலு வந்தார். அங்கு அவரது ரூ.23 ஆயிரத்து 700-ஐ டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஒப்படைத்தார். அப்போது ஏட்டு உத்ராணி அருகில் இருந்தார். வங்கி ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.23 ஆயிரத்து 700 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஏட்டுவின் மனிதநேயத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் பாராட்டி கவுரவித்தார்.


Next Story