பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர். அவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். அவர் நகைக்கடையில் திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி மற்றும் போலீசார், ராஜசேகர் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்துள்ளனர். விசாரணையின்போது, அவர்களை போலீசார் கடுமையாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் திருச்சி வந்து, அவர்களை மீட்டு சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் கடந்த வாரம் பட்டுக்கோட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டடார்.
இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெயாவை ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.