குள்ளநரி, வேலூர் பூங்காவுக்கு மாற்றம்


குள்ளநரி, வேலூர் பூங்காவுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 Aug 2023 1:15 AM IST (Updated: 23 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மீட்கப்பட்ட குள்ளநரியை வனத்துறையினர் வேலூரில் உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

கோயம்புத்தூர்

கோவை


கோவையை அடுத்த மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட மலு மிச்சம்பட்டியில் விவசாய நிலத்தில் கடந்த 2022-ம் டிசம்பர் மாதம் குள்ளநரி குட்டிகள் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனே வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது பிறந்து 2 வாரங்களே ஆன 5 குள்ளநரி குட்டிகள் இருந்தன. அவற்றை தாய் குள்ளநரி வந்து அழைத்து செல்லும் என்று கருதி 2 நாட்கள் காத்திருந்தனர். ஆனால் தாய் குள்ளநரி வராத நிலையில் 4 குட்டிகள் இறந்துவிட்டன.

இதனால் ஒரு குள்ளநரி குட்டியை வனத்துறை அதிகாரிகள் மீட்டு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் உள்ள பராமரிப்பு மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குள்ளநரி குட்டி தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த குள்ளநரியை வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவிற்கு மாற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோவையில் இருந்து குள்ளநரியை வன கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் விலங்கு மீட்பு பெட்டியில் வைத்து ஜீப் மூலம் நேற்று வேலூர் அமிர்தி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். அங்கு குள்ளநரி பாதுகாப்பாக விடப்பட்டது.


Next Story