உலாந்தி வனச்சரகர் மேட்டுப்பாளையத்துக்கு இடமாற்றம்


உலாந்தி வனச்சரகர் மேட்டுப்பாளையத்துக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதித்த, உலாந்தி வனச்சரகர் காசிலிங்கத்தை மேட்டுப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதித்த, உலாந்தி வனச்சரகர் காசிலிங்கத்தை மேட்டுப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கார்களை தாக்கிய யானை

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இதில் கோழிகமுத்தி முகாமிற்கு மட்டும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த சிலரை வரகளியாறு முகாமிற்கு வனத்துறையினர் கார்களில் அழைத்து சென்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் கார்களை தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நிறுத்தி விட்டு, முகாமிற்கு நடந்து சென்றனர். அப்போது சங்கிலியால் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு யானை சுற்றுலா பயணிகளின் கார்களை தாக்கி புதருக்குள் தள்ளியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானை உதவியுடன் புதருக்குள் விழுந்த கார்களை மீட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார் சென்றது.

வனச்சரகர் இடமாற்றம்

இதைதொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் பார்கவ தேஜா, உலாந்தி வனச்சரகர் காசிலிங்கத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலர்கள், ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வனச்சரகர் காசிலிங்கத்தை மேட்டுப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம், மேட்டுப்பாளையம் சமூக காடுகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிபுரிந்து வரும் சுந்தரவேலன் உலாந்தி வனச்சரகராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட வனச்சரகர் காசிலிங்கத்துக்கு குற்றத்தாள் வழங்கப்பட்டு உள்ளது. புலிகள் காப்பக சட்ட அடிப்படை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்து செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story