இடமாற்றம் செய்யப்பட்ட இணை சார் பதிவாளர் அலுவலகம் மீண்டும் பெரியகுளத்திலேயே செயல்படும்:பதிவுத்துறை டி.ஐ.ஜி. தகவல்


இடமாற்றம் செய்யப்பட்ட இணை சார் பதிவாளர் அலுவலகம் மீண்டும் பெரியகுளத்திலேயே செயல்படும்:பதிவுத்துறை டி.ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இடமாற்றம் செய்யப்பட்ட இணை சார் பதிவாளர் அலுவலகம் மீண்டும் பெரியகுளத்திலேயே செயல்படும் என்று பதிவுத்துறை டி.ஐ.ஜி. கூறினார்.

தேனி

பெரியகுளத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 ஆகியவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இந்த அலுவலகங்கள் மாற்றம் செய்யப்பட்டது. இணை சார் பதிவாளர் அலுவலகம் 1-ல் பெரியகுளம் பகுதியை சேர்ந்த ஆவணங்கள் உள்ளன. இந்த அலுவலகம் மாற்றப்பட்டதற்கு அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தேனிக்கு மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தை பெரியகுளத்திற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இணை சார் பதிவாளர் அலுவலகம் 1-ல் உள்ள ஆவணங்களை இணை சார் பதிவாளர் அலுவலகம் 2-க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத், மாவட்ட பதிவாளர் விஜயசாந்தி ஆகியோர் பெரியகுளத்தில் உள்ள இணை சார் பதிவாளர்-2 அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து மாற்றம் செய்யப்பட்ட இணை சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் பெரியகுளத்திலேயே செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. கூறுகையில், தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இணை சார் பதிவாளர் அலுவலகம்-1-ஐ இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் பெரியகுளத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்திலேயே பத்திரங்களை வழக்கம் போல் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

1 More update

Next Story