மின்மாற்றிக்கு அடியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதால் விபத்து


மின்மாற்றிக்கு அடியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதால் விபத்து
x

உடுமலை பகுதியில் மின்மாற்றிக்கு அடியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர்

உடுமலை பகுதியில் மின்மாற்றிக்கு அடியில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தூய்மைப்பணியாளர்கள்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. ஆனாலும் பல வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குப்பை இல்லாத நகராட்சி உருவாக்கும் முயற்சியாக வீதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் குப்பைகளை வீதிகளில் வீசி எறியும் பொதுமக்களின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் வீடுகளில் சேகரித்து வரும் குப்பைகளை தூய்மைப்பணியாளர்களே தீ வைத்து கொளுத்துவதாகவும் புகார் உண்டு.

விபத்து அபாயம்

இந்தநிலையில் உடுமலை உடுப்பி ரோட்டில் உள்ள மின் மாற்றிக்கு அடியில் தினசரி ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் அவ்வப்போது அந்த குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் தீப்பொறிகள் பறந்து மின் மாற்றியில் விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் சாலையோர புற்கள் காய்ந்த நிலையில் உள்ளது.

குப்பைகளில் எரியும் தீ புற்கள், குடியிருப்புகள் என பரவி தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பைகள் எரிவதால் துர்நாற்றம் வீசுவதுடன் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதிக அளவில் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் குப்பைகள் எரிவதால் ஏற்படும் புகை மண்டலத்தில் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலையும் உள்ளது.

நடவடிக்ைக

எனவே சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதையும், அபாயகரமான முறையில் குப்பைகள் எரிக்கப்படுவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Related Tags :
Next Story