என்ஜினீயர் கொலை வழக்கில் திருநங்கை கைது
திருச்சியில் என்ஜினீயர் கொலை வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் என்ஜினீயர் கொலை வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
டிப்ளமோ என்ஜினீயர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீதாலட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரசாமி. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் பாஸ்கரன் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 6-ந்தேதி வேலைக்கு சென்ற பாஸ்கரன் இரவில் வீடு திரும்பவில்லை. இதனால் மறுநாள் 7-ந்தேதி காலை அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி, அவருடைய அண்ணன் அரவிந்தன் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தலையில் கல்லைப்போட்டு கொலை
இதற்கிடையே, காலை 9.45 மணி அளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் ராணுவ மைதானம் அருகே பாஸ்கரன் கொடூரமான முறையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு ரத்தக்கறையுடன் கிடந்தார். அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது.
மேலும், அவர் அணிந்திருந்த ஷூ, பெல்ட் ஆகியவையும் புதரில் கிடந்ததுடன், பெண்கள் அணியும் ஒரு ஜோடி செருப்பும், ரத்தக்கறை படிந்த பெரிய மரக்கட்டை ஆகியவையும் கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார்.
திருநங்கைக்கு தொடர்பு
முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு பணி முடிந்ததும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய பாஸ்கரன், அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் இரவு 11 மணி அளவில் மன்னார்புரத்துக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு போதை அதிகமாக இருக்கவே, அவர் பஸ்நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டது தெரியவந்தது.
அங்கிருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததால், அவர், அங்கிருந்து சம்பவம் நடந்த இடத்துக்கு எப்படி வந்தார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.
திருநங்கை கைது
அப்போதுதான், திருச்சி, மன்னார்புரம், காஜா மலை, குடிசை பகுதியை சேர்ந்த திருநங்கையான சாமிநாதன் என்கிற வைஷ்ணவி (35) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6-ந்தேதி பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் பாஸ்கரன் திருநங்கை வைஷ்ணவியை பெண் என்று நினைத்து சந்தித்து உள்ளார். அவரது அருகே சென்றபோதுதான் அவர் திருநங்கை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன் அடித்துக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட திருநங்கை வைஷ்ணவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.