திருநங்கை மர்மச்சாவு


திருநங்கை மர்மச்சாவு
x

திருப்பத்தூர் அருகே திருநங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்களை திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

திருமணம் செய்துவைக்க...

திருப்பத்தூரை அடுத்த புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி-தெய்வானை தம்பதியரின் மகள் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19). இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். திருநங்கையாக மாறியது அவரது உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதனால் குரிசிலாப்பட்டு கிராமத்தில் உள்ள தெய்வானையின் சகோதரி முனீஸ்வரி வீட்டிற்கு சந்திரிகா சென்றுள்ளார். அங்கு சந்திரகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

மர்மச்சாவு

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார். சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரிகா இறந்த தகவல் அறிந்ததும் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை முற்றுகையிட்டனர்.

அப்போது சந்திரிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு இருந்த குரிசிலாப்பட்டு போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story