மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் கொளுத்தும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செயற்குழு உறுப்பினர்கள் அய்யப்பன், ஜாபர், ரசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இட ஒதுக்கீட்டின்படி வேலை
போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, காது கேளாதவருக்கு வேலை வழங்க வேண்டும். காதுகேளாதவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்.
மாதாந்திர உதவித்தொகையை வருவாய்த்துறையிலிருந்து மாற்றி, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் வழங்க வேண்டும். காது கேளாதவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
கலெக்டரிடம் மனு
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.