பஸ்சில் தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த திருநங்கை


பஸ்சில் தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த திருநங்கை
x

தக்கலை பஸ் நிலையத்தில் பயணி தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை திருநங்கை ஒருவர் கண்டெடுத்து நேர்மையுடன் ஒப்படைத்தார். உணவுக்காக பிச்சை எடுத்த நிலையிலும் நன்றி கடனாக கொடுத்த பணத்தை பெற மறுத்து விட்டார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை பஸ் நிலையத்தில் பயணி தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை திருநங்கை ஒருவர் கண்டெடுத்து நேர்மையுடன் ஒப்படைத்தார். உணவுக்காக பிச்சை எடுத்த நிலையிலும் நன்றி கடனாக கொடுத்த பணத்தை பெற மறுத்து விட்டார்.

பஸ்சில் கிடந்த பர்ஸ்

தக்கலை பஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு அருமனையில் இருந்து வந்த 16ஏ அரசு பஸ் வந்து நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கியபின் அந்த பஸ்சில் அருமனை செல்வதற்காக சில பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது ஸ்வீட்டி (வயது30) என்ற திருநங்கை பயணிகளிடம் பிச்சை எடுப்பதற்காக பஸ்சில் ஏறினார். அவர் ஒரு இருக்கையின் அடியில் ஒரு பர்ஸ் கிடப்பதை பார்த்தார்.

அந்த பர்சை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் ஆதர்கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவை இருந்தன.

உடனே, ஸ்வீட்டி அந்த பர்சை பஸ் நிலையத்தில் நின்று ெகாண்டிருந்த போக்குவரத்து கழக ஊழியர் யோபுதாசிடம் கொடுத்து, 'இதை தவற விட்ட யாராவது தேடி வந்தால் கொடுத்து விடுங்கள்' என கூறிவிட்டு சென்றார்.

உரியவரிடம் ஒப்படைப்பு

இந்தநிலையில் மதியம் 12 மணியளவில் ஓட்டலிவிளையை சேர்ந்த விஜுகுமார் (38) என்பவர் நேர குறிப்பாளர் அறைக்கு பதற்றத்துடன் ஓடி வந்து, 'எனது பர்சை தவற விட்டேன் அதில் ரூ.5 ஆயிரம் இருந்தது' என்று கூறினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர் யோபுதாஸ் அவரிடம் பர்சுக்குள் என்னென்ன ஆவணங்கள் இருந்தது என கேட்டார். அவர் கூறிய தகவல்கள் சரியாக இருந்ததை உறுதி படுத்தி பர்சை ஒப்படைப்பதற்கு அதை எடுத்து கொடுத்த திருநங்கையை தேடினார். அப்போதும், அவர் ஒரு பஸ்சில் பயணிகளிடம் கையேந்தி கொண்டிருந்தார்.

அவரை வரவழைத்து அவரது முன்னிலையில் ஊழியர் யோபுதாஸ் பர்சை உரியவரிடம் ஒப்படைத்தார். அப்போது நேர குறிப்பாளர் வினோத் மற்றும் பயணிகள் உடனிருந்தனர்.

பணத்தை பெற மறுப்பு

பர்சை பெற்று கொண்டவர் திருநங்கை ஸ்வீட்டிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் நன்றிகடனாக ரூ.500-ஐ எடுத்து கொடுத்தார். ஆனால், அதை வாங்க மறுத்துவிட்டார். தொடர்ந்து திருநங்கை ஸ்வீட்டி கூறும்போது, 'எனக்கு அடுத்தவர்கள் பொருள் மீது ஆசையில்லை. ஒருவேளை உணவுக்காக கடைகாரர்கள், பஸ் பயணிகள் கொடுக்கும் காசு எனக்கு போதும்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதைகேட்டு அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.


Next Story