வாழப்பாடியில் பயங்கரம்வீடு புகுந்து உல்லாசத்துக்கு அழைத்த டிரைவரை அடித்துக் கொன்ற திருநங்கைபோலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
வாழப்பாடியில் வீடு புகுந்து உல்லாசத்துக்கு அழைத்த டிரைவரை திருநங்கை அடித்துக்கொன்றார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாழப்பாடி
வாழப்பாடியில் வீடு புகுந்து உல்லாசத்துக்கு அழைத்த டிரைவரை திருநங்கை அடித்துக்கொன்றார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடித்துக் கொலை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). நேற்று முன்தினம் நள்ளிரவு சதீஷ்குமார் மது குடித்துவிட்டு வாழப்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் வசிக்கும் திருநங்கை நவ்யா (36) என்பவர் வீட்டிற்கு சென்று உள்ளார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நவ்யா, வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
பரிதாப சாவு
வீட்டில் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து. 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சதீஷ்குமாரை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருநங்கை கைது
சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்த திருநங்கை நவ்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்ததுடன், டிரைவர் வேலைக்கும் சென்று வந்துள்ளார். சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே திருநங்கை நவியாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அதுவும் வெளிஇடங்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
உல்லாசத்துக்கு அழைப்பு
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சதீஷ்குமார் இருந்ததாக தெரிகிறது. அப்போது நவ்யா வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் வா என்று அழைத்துள்ளார். அதற்கு நவ்யா, நான் இருப்பது குடியிருப்பு பகுதி. இங்கு சரிவராது. நாளைக்கு வெளியே செல்லலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சதீஷ்குமார் தொடர்ந்து நவ்யாவை வற்புறுத்தியதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த நவ்யா, கோபத்தில் உருட்டு கட்டையை எடுத்து சதீஷ்குமாரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக ஆஸ்பத்திரியில் இறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருநங்கையுடனான தவறான பழக்கம் சதீஷ்குமார் உயிரை பறித்ததுடன் அவரது குடும்பத்தை நிர்கதியாக்கி விட்டதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.