திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
அரூர் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
சுகாதாரமான குடிநீர்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் நாகர்கூடல் அருகே உள்ள மத்தளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மாசுபாடு அடைந்துள்ளதால் அதை பயன்படுத்திய சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்த கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
வீட்டு மனை பட்டா
அரூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் 23 திருநங்கைகள் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கள் வாழ்வாதார சூழலை கருத்தில் கொண்டுஅச்சல்வாடி பகுதியில் எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் ஏழை எளிய மக்கள் வசித்து வருகிறோம். இதில் 17 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நிலம் ஒதுக்கீடு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
பூரண மதுவிலக்கு
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த கோரிக்கை மனுவில், தமிழ்நாட்டில் மது பழக்கத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்திலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. இதனால் வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மின்சார கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தான் சுமை மேலும் ஏறும். எனவே வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரியிருந்தனர்.