திருநங்கைகள் முன்னேற்ற பாதையில் செல்லகல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்மிஸ் கூவாகம் சென்னை நிரஞ்சனா பேட்டி
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு அரசு உரிய இடஒதுக்கீடு வழங்கினால் முன்னேற்ற பாதைக்கு செல்வோம் என்று மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கூறினார்.
விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த நிரஞ்சனா (வயது 25), நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பி.காம் படித்து முடித்துள்ளேன். முதன் முதலாக அழகிப்போட்டியில் பங்கேற்று, மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
தற்போது திருநங்கைகள், எல்லாத்துறைகளிலும் சாதிக்க தொடங்கி விட்டனர். திருநங்கைகளுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு உரிய இடஒதுக்கீடு வழங்கினால் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்வோம். தற்போது திருநங்கைகளின் வளர்ச்சியால் எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர்கள் இனிமேல் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம். சட்ட அங்கீகாரத்துடன் பெற்றோர் அனைவரும் எங்களை ஏற்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாங்கள் மேலும் மேலும் நிறைய சாதிக்க முடியும் என்றார்.
வாய்ப்பு கொடுங்கள்
மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் 2-ம் இடம்பெற்ற சென்னையை சேர்ந்த டிஷா (26) கூறும்போது, நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து முடித்துள்ளேன். 2-ம் இடம் பிடித்து இருப்பது எனது தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
அடிமட்ட நிலையில் இருந்து சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு இதுபோன்ற போட்டிகள் ஒரு தூண்டுதலாக அமைகிறது. நான் திருநங்கையாக மாறியபோது என்னை பலரும் நிராகரித்தனர். ஏன், எனது சொந்த தம்பிகளே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எனது தாய் மட்டும் என்னை ஏற்றுக்கொண்டார். அவரின் உதவியாலும், மூத்த திருநங்கைகளின் உதவியாலும் நான் இன்றைக்கு சாதித்து வருகிறேன். திருநங்கைகளை இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் ஏதேனும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆயிரம்பேர் குறை சொன்னாலும் அவர்களில் ஒருவர் நமக்கு ஆதரவாக இருப்பார். அவரை பிடித்துக்கொண்டு முன்னேறி வந்து வெற்றி பெற வேண்டும். திருநங்கைகளை பொறுத்தவரை நாங்கள் ஆண்கள், பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, எங்களால் எதையும் சாதிக்க முடியும். எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள், முன்னேற்றத்தை நாங்கள் காண்பிக்கிறோம் என்றார்.
யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் 3-ம் இடம் பிடித்த சேலத்தை சேர்ந்த சாதனா (25) கூறுகையில், நான் சமூகநல படிப்பு படித்துள்ளேன். இந்த முறைதான் அழகிப்போட்டியில் பங்கேற்றேன். திருநங்கைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரையும் விட ஒரு படி உயர்ந்தவர்கள்.. கல்வி ஒன்று மட்டும் நம்மிடம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அரசு வேலைவாய்ப்பில் எங்களுக்கு முன்னுரிமை அளித்தால் எங்களுடைய வாழ்வு பிரகாசமாகும் என்றார்.