போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரசாரம்
கம்பத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும். ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அன்றே பணப்பலன்களை வழங்கிட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் தனியார் மையத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
இதனையொட்டி கம்பத்தில் நேற்று, அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் சங்கத்தினர் வாகன பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கம்பம் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை, வ.உ.சி.திடல், காந்திசிலை, போக்குவரத்து சிக்னல், புதிய பஸ்நிலையம் வழியாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறைவடைந்தது. இதில் போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.